சூரா அல்-ஃபீல் முதல் சூரா அன்-நாஸ் வரை - ஓர் ஆய்வு! (பகுதி - 3)


(குர்ஆனின் இறுதிப் பகுதியில் இடம் பெற்றுள்ள சூரா அல்-ஃபீல் முதல் சூரா அன்-நாஸ் வரை - ஒவ்வொரு அத்தியாயமும் அதற்கு அடுத்து வருகின்ற அத்தியாயத்துடன் எப்படி பிணைக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்கிறது இக்கட்டுரை.)

**

அல் லஹப் அத்தியாயத்தை சற்று கவனியுங்கள்: அதன் ஒவ்வொரு வசனத்தின் கடைசிச் சொல்லையும் கவனியுங்கள்: வ-தப்; கஸப்; லஹப்; ஹதப்; மஸத்.

அடுத்து வருகின்ற அல் இக்லாஸ் அத்தியாயத்தின் ஒவ்வொரு வசனத்தின் கடைசிச் சொல்லையும் பாருங்கள்: அஹத்; சமத்; (யலித்); யூலத்; அஹத்.

ஒரு விதமான அடுக்குமொழி நடையைக் கவனித்தீர்களா?

இப்போது கேள்வி ஒன்றைக் கேட்போம். ஏகத்துவத்தை, இறை ஒருமைத் தத்துவத்தை இரத்தினச் சுருக்கமாக விளக்கிடும் அத்தியாயம் ஒன்றை ஏன் அல் லஹப் அத்தியாயத்துக்கு அடுத்ததாக வைத்திட வேண்டும்?

எனக்குத் தோன்றுவது இது தான்:

மக்கத்துக் குறைஷிகள் எதிர்த்து நிற்பது - வெளிப்படையில் வேண்டுமானால் - முஹம்மது நபியவர்களையும், அவர்களது நபித்தோழர்களையும் தான் என்று நாம் சொல்லலாம்.

ஆனால் - எல்லாம் வல்ல அந்த ஏக இறைவன் அதனை அவ்வாறு எடுத்துக் கொள்ளவே இல்லை!

மாறாக, இந்தக் குறைஷியர் அனைவரும் எதிர்த்து நிற்பது, இறைவனையும், இறைமார்க்கத்தையும் தான்!

இங்கே நம்பிக்கையாளர்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் சேர்த்தே ஒரு செய்தியை அழுத்தமாக முன் வைக்கிறான் இறைவன். அது என்ன?

நம்பிக்கையாளர்களுக்கு என்ன செய்தி?

"இந்தக் குறைஷியர் எதிர்த்து நிற்பது உங்களைத் தான் என்று எண்ண வேண்டாம். அவர்கள் "என்னையே" எதிர்க்கிறார்கள். எனவே அவர்களை என்னிடம் விட்டு விடுங்கள். நான் தனி ஒருவனாக நின்று அவர்களை எவ்வாறு எதிர் கொள்கிறேன் என்பதைப் பாருங்கள்!"

நிராகரிக்கும் குறைஷியருக்கு என்ன செய்தி?

"எனது தூதராகிய இந்த முஹம்மதுவையும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பலவீனமான நம்பிக்கையாளர்களையும் எளிதில் நீங்கள் வென்று விடலாம் என்று எண்ணி விட வேண்டாம். நீங்கள் எதிர்த்து நிற்பது அவர்களை அல்ல! மாறாக "என்னைத் தான்" நீங்கள் எதிர்த்து நிற்கிறீர்கள். உங்களைத் தனி ஒருவனாக நின்று நான் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறேன் என்பதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்!"

இந்தத் தனி ஒருவனாக நின்று நிராகரிப்பவர்களை எதிர்கொள்ளும் "வழிமுறையை" உணர்த்துவது தான் இந்த அத்தியாயம்!

முஹம்மது நபியை சந்ததியற்றவர் என்று சொன்னார்கள் அல்லவா?

"இறைவன் ஒருவன் தான்; அவன் எந்த விதத் தேவையும் அற்றவன் தான்; அவனுக்குப் பெற்றவர்கள் இல்லை தான்; "சந்ததியற்றவன்" தான்; பார்த்து விடுவோமா!" என்று அறைகூவல்
விடுப்பது போல் அமைந்தது தான் இந்த அத்தியாயம்!

**

எனவே, நம்பிக்கையாளர்களே! நீங்கள் இந்த குறைஷியரை "என்னிடம்" விட்டு விடுங்கள். நான் அவர்களைக் கவனித்துக் கொள்கிறேன்!" என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல்,
"நீங்கள் எனக்குப் பின்னே வந்து விடுங்கள். அதாவது, என் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து விடுங்கள். உங்களைப் பாது காத்திட நான் போதுமானவன் என்பதை உணர்த்துவது தான் அடுத்த இரண்டு அத்தியாயங்களும்!!!

**

எவற்றிலிருந்தெல்லாம் பாதுகாப்பு?

கால சூழ் நிலைகளிலிருந்து (time) நமக்கு பாதுகாப்பு தேவை!

வாழ்கின்ற சூழ் நிலைகளிலிருந்து (space) நமக்கு பாது காப்பு தேவை!

அல் பலக் அத்தியாயத்தின் முதல் மூன்று வசனங்களும் அந்தப் பாதுகாப்பைத்தான் நமக்கு வழங்குகின்றன!

நிராகரிப்பவர்கள் - நம்பிக்கையாளர்களை இரண்டு விதமாக எதிர்கொள்வார்கள்.

ஒன்று: வெளிப்படையாக தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்துவார்கள்.

இன்னொன்று: மறைமுகமாக, இரகசியமாக, சதித்திட்டங்கள்  மூலமாகவும் தங்கள் எதிர்ப்பினை  வெளிப்படுத்திக் காட்டுவார்கள்.

இந்த இரண்டு எதிர்ப்புகளிலிருந்தும் பாதுகாப்பு பெற்றுத் தருமாறு இறைவனிடம் வேண்டுவதைத் தான் அடுத்த இரண்டு வசனங்களும் சொல்லித் தருகின்றன.

அப்படியானால் அடுத்த அத்தியாயம்?

இது வரை நீங்கள் தொடர்ந்து கவனித்து வந்திருந்தீர்கள் என்றால் உங்களுக்கு ஒன்று புரிந்திருக்கும்.

அதாவது ஒவ்வொரு கட்டத்திலும் நம்பிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டிக் கொண்டே வசனங்களையும் அத்தியாயங்களையும் தொடர்வது தான் இறைவனின் வழிமுறை!

இந்த நம்பிக்கையைத் தகர்ப்பது தான் "வஸ்வாஸ்"  எனும் சந்தேக விதை!

"நாம் வெற்றி பெற முடியாது! நமக்கென்று எதிர்காலம் இல்லை! நாம் அழிக்கப்பட்டுப் போய் விடுவோம்!" என்றெல்லாம் தாழ்வு மனப்பான்மையை நம் உள்ளத்துக்குள் விதைப்பது தான் வஸ்வாஸ்!

இதனைச் செய்து விட்டு ஒதுங்கி விடுபவன் தான் ஷைத்தான்! இப்படிப்பட்ட ஷைத்தான்கள் மனிதர்களிலும் உண்டு. ஜின் இனத்தாரிலும் உண்டு. எனவே இந்த வஸ்வாஸ் எனும் சந்தேகப் புத்தியிலிருந்து உங்கள் இறைவனிடம் பாதுகாப்பு பெற்றுக் கொள்ளுங்கள் என்று திருமறையின் கடைசி அத்தியாயத்தை முடித்து வைக்கிறான் இறைவன்!

இப்போது மீண்டும் ஒரு  முறை அல் பீல் அத்தியாயத்திலிருந்து அன் நாஸ் அத்தியாயம் வரை ஒரு முறை தொடர்ந்து ஓதிப் பாருங்கள். அனைத்து  அத்தியாயங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதைக் கண்டு கொள்வீர்கள்.

இவை எனது சிந்தனையோட்டமே தவிர விளக்கவுரை அன்று.
இறைவனே மிக அறிந்தவன். 

Comments