சூரா அல்-ஃபீல் முதல் சூரா அன்-நாஸ் வரை - ஓர் ஆய்வு! (பகுதி - 2)


(குர்ஆனின் இறுதிப் பகுதியில் இடம் பெற்றுள்ள சூரா அல்-ஃபீல் முதல் சூரா அன்-நாஸ் வரை - ஒவ்வொரு அத்தியாயமும் அதற்கு அடுத்து வருகின்ற அத்தியாயத்துடன் எப்படி பிணைக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்கிறது இக்கட்டுரை.)


மார்க்கம் என்பது இரண்டு தான்!

ஒன்று: இறைவன் வழங்கிய அனைத்து அருள் வளங்களையும், பலவீனர்களுக்காக செலவு செய்யச் சொல்கின்ற மார்க்கம்.  இதுவே இறை மார்க்கம். இதுவே இறைத்தூதர்கள் கொண்டு வந்த மார்க்கம்.

இன்னொன்று: பணத்தை, பொருட்களை, வளங்களை - சேர்த்து வைத்துக் கொண்டு, பலவீனர்களின் உரிமைகளை மறுக்கின்ற "மார்க்கம்". இதுவே, இறைத்தூதர்களை, இறை மார்க்கத்தை எதிர்ப்பவர்களின் மார்க்கம். அன்றைய குறைஷித் தலைவர்களின் மார்க்கம்.

இப்போது அல் கவ்ஃதர் அத்தியாயத்தை எடுத்துக் கொள்வோம்.

பொதுவாகவே, மனித சமூகங்கள் பெருமை அடித்துக் கொள்கின்ற விஷயங்கள் இரண்டு:

ஒன்று: பொருள் செல்வம் (அல் மால் - Material Resources)

இரண்டு: மக்கள் செல்வம் (அல் பனூன் - Human Resources)

பொருள் செல்வத்தை சேகரித்து வைத்துக் கொண்டு ஏழைகளுக்கு வழங்க மறுப்பதை அல் மாவூன் அத்தியாயத்தில் சுட்டிக் காட்டிய இறைவன், தங்களிடம் உள்ள ஆள் பலத்தின் அடிப்படையில், பெருமை அடிப்பவர்களின் எதிர்காலம் என்ன என்பதை அடுத்த அத்தியாயம் ஆகிய அல் கவ்ஃதர் அத்தியாயத்தில் சுட்டிக் காட்டுகிறான் இறைவன்.

என்ன நடந்தது?

அது மக்காவில் இறை மார்க்கத்தின் பக்கம் அண்ணல் நபியவர்கள் அழைப்பு கொடுத்துக் கொண்டிருந்த காலம். மிக சொற்பமானவர்களே அண்ணலாரின் பக்கம். குறைஷிகளோ, இறை மார்க்கத்தின் "தன்மையைப்" புரிந்து கொண்டு அண்ணலாரை எதிர்த்து நின்ற கால கட்டம் அது.

இறை மார்க்கத்தை ஏற்று நின்ற இறை நம்பிக்கையாளர்களின் பலவீனமான நிலை! அண்ணலாரிடம் பொருள் பலமும் இல்லை! ஆள் பலமும் இல்லை! அந்த சமயத்தில் தான் அண்ணலாருக்குப் பிறந்த ஆண் குழந்தை ஒன்று இறந்து விடுகிறது! இந்த துக்ககரமான சூழ்நிலையிலும் நேர்மை மிக்க மனிதர் ஒருவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தவறிய குறைஷியர்களுள் ஒருவன் - நபிகளாரை "சந்ததியற்றவர்" என்று ஏளனம் செய்தான்!

வந்தது கோபம் இறைவனுக்கு! இறக்கி வைத்தான் மிகச் சிறிய இந்த அத்தியாயத்தை!

நாம் அல் கவ்ஃதரைக் கொடுத்து விட்டோம் இறைத்தூதருக்கு என்று துவங்குகிறது இவ்வத்தியாயம்.

கவ்ஃதர் என்றால்   "abundance" என்று பொருள்! அதாவது அபரிமிதமாக நாம் வழங்கி விட்டோம் என்கிறான் இறைவன்.

The term kawthar is an intensive form of the noun kathrah which, denotes "copiousness", "multitude" or "abundance".

இது ஆழமான பல பொருட்களைக் கொண்ட சொல் ஆகும்! அனைத்துச் சிறப்புகளையும் உள்ளடக்கிய சொல்லாகும் இது! அதாவது "அனைத்து சிறப்புகளையும் அபரிமிதமாக உங்களுக்கு வழங்கி விட்டேன்!" என்று ஆறுதல் சொல்கிறான் இறைவன் நபியவர்களுக்கு!

இறை மார்க்கத்தை எதிர்ப்பவர்கள் எல்லா விதமான வளங்களையும்  கையகப் படுத்திக் கொண்டு  பெருமை பேசிக் கொண்டிருந்தார்களே, அவைகளை எல்லாம் விட அல் கவ்ஃதர் மேலானது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை!

அது போலவே குறைஷியர்கள், நபியவர்களின் ஆண் வாரிசு மரணித்தமை மற்றும், நம்பிக்கையாளர்களின் மிக சொற்பமான எண்ணிக்கை - இவைகளை வைத்துக் கொண்டு, இறை மார்க்கத்துக்கு "எதிர்காலம்" இல்லவே இல்லை என்பதைக் குறித்திட, நபியவர்களை "சந்ததியற்றவர்" என்று ஏளனம் செய்ததற்கு மறுப்பாகத்தான் - "உனது எதிரியே சந்ததியற்றுப் போவான்!" என்று இந்த அத்தியாயம் முடிவடைகின்றது!

இது மக்காவில் இறக்கியருளப்பட்ட அத்தியாயம் என்பதை நினைவில் கொள்க!

**
அடுத்த அத்தியாயத்துக்கு செல்வோம்.

ஒரு பக்கத்தில் இறைவன்! அவனது மார்க்கம்! அவனது இறைத்தூதர்! மற்றும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இறை நம்பிக்கையாளர்கள். இம்மார்க்கத்தின் நோக்கமெல்லாம், பலவீனர்களின் பக்கம், ஏழைகளின் பக்கம், ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பது தான். அவர்களுக்கு சேவை (to serve) செய்வது தான்! அதன் மூலம் இறை திருப்தியைப் பெறுவது மட்டும் தான்!

இன்னொரு பக்கத்தில் - இறை மார்க்கத்தை எதிர்ப்பவர்கள், பொருள் வளங்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு பெருமை அடிப்பவர்கள்; ஆள் பலத்தின் மீது "நம்பிக்கை" வைத்திருப்பவர்கள்; மக்களை, குறிப்பாக பலவீனர்களை அடிமைகளாகக் கருதுபவர்கள். அவர்களை தங்களுக்குச் சேவை செய்வதற்கென்றே பிறந்தவர்கள் (to be served) என்று கருதுபவர்கள்; இழிவு படுத்துபவர்கள்!

இந்த எதிரும் புதிருமான இரண்டு "மார்க்கங்களுக்கும்" என்ன உறவு இருந்திட முடியும்?

ஒருவர் இறைவனை நம்புதல் அல்லது நம்பாமல் இருத்தல் என்பது அவரவர் சிந்தனைச் சுதந்திரத்தின் பாற்பட்டது! மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்பதே இறை மார்க்கத்தின் உறுதியான நிலை!

ஆனால், ஒரு சிலர் சேர்ந்து கொண்டு - மனிதர்களுக்கு மத்தியில் நீதியையும், சமத்துவத்தையும், சுரண்டலற்ற பங்கீட்டையும் உறுதி செய்ய வந்திருக்கின்ற இறை மார்க்கத்தையே எதிர்ப்பவர்களாகி  விட்டால்? இறைவன் இப்பூமி முழுவதிலும் பரப்பி வைத்திருக்கின்ற எல்லா வளங்களுக்கும் சொந்தம் கொண்டாடிடத் தலைப்பட்டால், ஏனைய மக்களை அடிமைகளாக நடத்திட முற்பட்டு விட்டால், அவர்கள் தான் நிராகரிப்பாளர்கள்!

இத்தகையவர்களைப் பார்த்துத் தான் சொல்கிறது இறை மறை:

உங்கள் மார்க்கம் உங்களுக்கு! எனது மார்க்கம் எனக்கு என்று!

வளங்களைச் சுரண்டுபவனும், சுரண்டலை எதிர்ப்பவனும்  எப்படி ஓரணியில் நிற்க முடியும்?

மக்களுக்குச் சேவை செய்பவனும், மக்களைத் தங்களுக்குச் சேவை செய்ய வைப்பவனும் எப்படி ஓரணியில் நிற்க முடியும்?

குறிப்பு: நீதிக்காகக் குரல் கொடுத்திட பிற சமய மக்களுடன் சேர்ந்து களம் காண இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தயங்கியதே கிடையாது என்பதற்கான வரலாற்றுச் சான்று தான், அவர்கள் பங்கேற்ற  ஹிள்ஃபுல் ஃபுளூல் அமைப்பு என்பதை நாம் இங்கே கவனிக்கத் தவறி விடக் கூடாது.

**

இனி அடுத்த அத்தியாயம் என்ன?

எதிரும் புதிருமான இரண்டு மார்க்கங்களில் எதற்கு வெற்றி?

அன் நஸ்ர் அத்தியாயம் இறை மார்க்கத்தின் வெற்றி எப்படி சாத்தியப்படுத்தப்பட்டது என்பதைப் படம் போட்டுக் காட்டுகிறது!

அதற்கு அடுத்த அத்தியாயம்?

அல் லஹப் அத்தியாயம், இறைமார்க்கத்தை எதிர்த்து நின்றவர்களில் மிகக் கொடூரமான மனம் படைத்த அபூ லஹபின் தோல்வியைச் சுட்டிக் காட்டுகிறது!

கவனிக்க வேண்டிய வசனம் எது தெரியுமா?

அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்கு யாதொரு பலனும் அளித்திடவில்லை!

அத்தியாயங்களின் இணைப்பு புரிகின்றதா?

(தொடரும்)

Comments