தொழில் நுட்ப மேம்பாட்டினால் யாருக்கு லாபம்?


உதாரணம் ஒன்றைக் கொண்டு விளக்குவோம்.

நிறுவனம் ஒன்றில் பத்தாயிரம் தொழிலாளிகள் பணி புரிகிறார்கள். நிறுவனம் நன்றாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த சமயத்தில் - புதிய தொழில் நுட்பம் ஒன்றை, அறிவியல் உலகம் அறிமுகப்படுத்துகிறது.

அந்தப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இயந்திரம் ஒன்று, அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிபுரிகின்ற தொழிலாளிகள் பலரின் "வேலைகளை" ஆட்கள் யாரும் இல்லாமலேயே (automation) முடித்து விடுகிறதாம்!

கணக்குப் போட்டுப் பார்த்தால் - ஒரு ஐயாயிரம் தொழிலாளிகள் செய்கின்ற வேலையை அது தானே செய்து முடித்துத் தந்து விடுகிறதாம்.

இப்போது என்ன செய்யலாம்?


ஒன்று: பணி செய்து கொண்டிருக்கின்ற பத்தாயிரம் தொழிலாளிகளில், ஒரு ஐயாயிரம் பேரை, வேலையிலிருந்து நீக்கி, வீட்டுக்கு அனுப்பி விடலாம். மீதி ஐயாயிரம் பேரையும், அந்தப் புதிய இயந்திரத்தையும் வைத்துக் கொண்டு, நிறுவனத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்திக் கொள்ளலாம்.

ஆனால் விளைவுகள்?

விளைவு ஒன்று:

அந்த ஐயாயிரம் பேரைப் பணி நீக்கம் செய்வதால், நிறுவனத்துக்கு கணிசமானதொரு லாபம் கிடைத்து விடும். கொள்ளை லாபம் என்று கூடச் சொல்லலாம். இயந்திரம் வந்து விட்டதால், அவர்கள் வழங்கும் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான விலையை ஒன்றும் குறைக்கப் போவதில்லை!

அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், இயந்திரம் ஒன்றை வாங்க வேண்டும். அதனைப் பராமரிக்க வேண்டும். அதனை இயக்குவதற்கு ஒரு சில பொறியாளர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். எனவே எல்லா லாபமும் அவர்களுக்குத்தான்!

விளைவு இரண்டு:

ஆனால், ஒரு ஐயாயிரம் பேர் வேலை இழந்திருக்கிறார்களே! அவர்கள் வருமானம் என்னாவது? அந்தக் குடும்பங்கள் என்னாவது? அதனைப்பற்றி எமக்கென்ன கவலை என்கிறார்கள் - "முதலாளிகள்"!

இது நியாயமா என்பதே நம் கேள்வி.

**
ஆனால், இதற்கு பதிலாக இன்னொரு அழகான தீர்வை முன் வைக்கிறார்கள் தொழிலாளர் நல பொருளாதார நிபுணர்கள்.

அவர்கள் தரும் தீர்வு இது தான்:

இயந்திரம் வரட்டும். ஆனால் அதற்காக ஏன் ஐயாயிரம் பேரை பணி நீக்கம் செய்கிறீர்கள்? அதற்கு பதிலாக, அந்தப் பத்தாயிரம் தொழிலாளிகளின் பணி நேரத்தை தேவையான அளவுக்குக் குறைத்து விடுங்களேன்.

வாரத்துக்கு நாற்பது மணி நேரம் பணி செய்கிறார்களா? இருபது அல்லது இருபத்து ஐந்து மணியாகக் குறைத்துக் கொண்டால், எல்லாருக்கும் வேலை. எல்லாருக்கும் கூலி. எல்லாக் குடும்பங்களிலும் மகிழ்ச்சி! தொழில் நுட்பம் வந்ததால் ஏற்பட்ட பலனை தொழிலாளிகளும் அனுபவிக்கட்டுமே என்கிறார்கள் அவர்கள்!

ஆனால் தொழில் புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்து, இன்று வரை, தொழில் நுட்பத்தின் பலன்களை முதலாளிகள் மட்டுமே அனுபவித்து வருகிறார்கள் என்பது தான் மிகப்பெரிய வேதனை என்கிறார்கள் இடது சாரி பொருளாதார நிபுணர்கள்.
சரியாகத்தான் படுகிறது!

**

அல்லாஹ், நீதி செலுத்துமாறு உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்! (குர்ஆன் 16:90)

முஸ்லிம்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய வசனம் இது!

**

குறிப்பு: தானாக இயங்கும் (self driving cars) கார்கள், டிரக்குகள் எல்லாம் வர இருக்கின்றன விரைவில்! முழு உலகெங்கும் இப்படிப்பட்ட தானியங்கி வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டால், எத்தனை இலட்சம் டிரைவர்கள் பணியிழப்பார்களோ? என்ன மாற்றங்கள் நிகழுமோ?

அமெரிக்காவில் மட்டும் குறைந்தது 40 - 50 லட்சம் கார் ஓட்டுனர்கள் பணி இழப்பார்களாம்!

Comments