மென்மையாக...

நபியவர்கள் சிறுவராக இருந்த போது நடைபெற்ற சம்பவங்களுள் ஒன்றாக இது நபியவர்களின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அறியாமைக்கால செயலை செய்ய வேண்டுமென நான் இருமுறை மட்டுமே விரும்பினேன். அந்த இருமுறையும் அல்லாஹ் என்னைத் தடுத்துவிட்டான். பிறகு அல்லாஹ் தூதுத்துவத்தை எனக்கு அருளும் வரை அந்த எண்ணம் ஏற்பட்டதே இல்லை.



ஓர் இரவு மக்காவின் மேற்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவரிடம் என் ஆடுகளை நீ பார்த்துக் கொள். மக்காவில் வாலிபர்கள் இராக்கதை பேசுவது போன்று நானும் பேசி வருகிறேன் என்று நான் கூறினேன். அவர் ஒப்புக் கொண்டார்.

நான் வெளியேறி மக்காவினுள் நுழைந்து அதில் முதல் வீட்டைக் கடந்தேன். அங்கு இசை சப்தத்தைக் கேட்டு அது என்னவென்று விசாரித்தேன். அதற்கு மக்கள் இன்ன ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் முடிந்து இன்று முதலிரவு என்று கூறினார்கள்.

நான் அதைக்கேட்க அமர்ந்தவுடன் நான் செவியேற்காத வகையில் அல்லாஹ் என்னைத் தடுத்து தூங்கச் செய்துவிட்டான். இறுதியில் சூரிய வெப்பம்தான் என்னை எழுப்பியது. எனது தோழரிடம் நான் சென்றபோது அவர் என்ன நடந்ததென விசாரிக்க நடந்ததைக் கூறினேன். அதற்குப் பிறகு நான் எந்தவொரு தீய செயலையும் செய்ய எண்ணியதேயில்லை.'' (முஸ்தத்ரகுல் ஹாகிம்)

**

இந்த சம்பவம் நாம் - சீரத் நூல்களில் / சொற்பொழிவுகளில் நாம் அடிக்கடி பார்வையிடக் கூடிய /
கேட்கக் கூடிய ஒன்று தான். ஆனால், படித்து விட்டு, அல்லது கேட்டு விட்டு அப்படியே கடந்து போய் விடுவோம்.

அல்லது நபியவர்களுக்கு - அறியாமைக்கால பழக்க வழக்கங்களின்மீது ஆவல் ஏற்படும் போதெல்லாம் அவற்றிலிருந்து அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்து விட்டான் என்ற பாடத்தை மட்டும் கற்றுக் கொள்வோம்.

ஆனால், இதனை நபியவர்கள் வாழ்வில் நடந்த அரிதான ஒரு சம்பவமாக மட்டும் பார்த்திடாமல்,
சற்றே இது குறித்து ஆழமாக சிந்திக்கத் தலைப்பட்டால், நாம் மேலும் பல படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள இயலும்.

இச்சம்பவம் குறித்து பேராசிரியர் தாரிக் ரமளான் என்ன சொல்கிறார் தெரியுமா?

இச்சம்பவத்தில் பெற்றோர்களுக்கு மிக நுட்பமான ஒரு பாடம் இருக்கிறது என்கிறார் அவர். நல்லது எது கெட்டது எது என்பது தெரியாத நிலையில், மார்க்கத்துக்குப் புறம்பான விஷயம் ஏதாவது ஒன்றில் நமது குழந்தைகளுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு விடுவது என்பது "மிகவும் இயல்பான ஒன்றே" என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இங்கே நபியவர்களுக்கு ஏற்பட்டது அப்படிப்பட்ட ஒரு ஈர்ப்பேயன்றி வேறில்லை. நபியவர்களும் ஒரு மனிதரே என்ற அடிப்படையில் இதனைப் புரிந்து கொள்வதில் நமக்கு ஒன்றும் கடினம் இல்லை. அது போலத்தான் நமது குழந்தைகளும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு நம் குழந்தைகள் மார்க்கத்துக்குப் புறம்பான ஒன்றின் பக்கம் ஈர்க்கப்பட்டு விட்டால், பதற்றமடைந்து குய்யோ முறையோ என்று குழந்தைகளை நாம் கலவரப்படுத்தி விடக்கூடாது.

இங்கே நபியவர்களை அல்லாஹ் எவ்வாறு கையாண்டான் என்பதை உற்று கவனியுங்கள். நபியவர்கள் -  ஈர்க்கப்பட்ட அந்த விஷயத்தின் பக்கம் நெருங்குகிறார்கள். அவ்வளவு தான். அவர்களை இயல்பானதொரு தூக்கத்தின் பக்கம் திருப்பி விட்டு விடுகிறான் இறைவன்! அதுவும் மிக மென்மையாக!

அது போலவே, நாம் - நமது குழந்தைகளையும், அவர்கள் - தடை செய்யப்பட்ட ஏதாவது ஒன்றின் பக்கம் ஈர்க்கப்பட்டு, அதன் பக்கம் செல்லத் தலைப்பட்டு விட்டால், மென்மையாக, மிக மென்மையாக அதிலிருந்து அவர்களைத் திருப்பி விட்டு விட வேண்டும். தாரிக் ரமளான் அவர்கள் - இதனை - gentle distraction - என்று குறிப்பிடுகின்றார்கள்!

இப்படிப்பட்ட மென்மையான அணுகுமுறையை விட்டு விட்டு, கத்துவது, திட்டுவது, கண்டிப்பது - அடித்து விடுவது - போன்ற கரடுமுரடான வழிமுறைகளைக் கடைபிடித்தால் - அது குழந்தைகளின் மன வளர்ச்சியில் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என்பது தான் இன்றைய உளவியலும் கூட!

இதில் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் கூட நல்லதொரு பாடம் இருக்கின்றது!

Comments