வாக்கியவாத அணுகுமுறையாளர்களை நாம் அணுகுவது எப்படி?

How to approach the literalists?

"நான் சொல்வது மட்டுமே சரி; இதற்கு மாற்றமாக யார் எதனைச் சொன்னாலும்  அது தவறே!" - என்ற இருமை மனநிலைக்குச் (binary vision) சொந்தக்காரர்களே - dogmatic minded people - என்று அழைக்கப்படுகிறார்கள்.

நம்மில் literalists - என்று அழைக்கப்படும் வாக்கியவாத அணுகுறையாளர்கள் தான், இப்படிப்பட்ட மூடுண்ட (closed minds) மன நிலைக்குச் சொந்தக்காரர்களாக விளங்குகிறார்கள்.

குறிப்பாக - நம்மைப் பொறுத்தவரை - நாம் ஆய்வாளர்களின் பக்கம் நிற்பவர்கள். பகுப்பாய்வை (critical mind) ஊக்குவிக்கும் அணியில் நிற்பவர்கள். கேள்வி கேட்பவர்கள்.  இஸ்லாத்தின் உயர்ந்த இலட்சியங்களை (maqasid - higher objectives) மனதில் கொண்டு சிந்திப்பவர்கள்.

ஆனால், நாம் நமது சிந்தனைகளை மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கும் போது, நாம் மேற்சொன்ன வாக்கியவாத அணுகுமுறையாளர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.


பெரும்பாலான சமயங்களில், நமது கருத்தை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து விடுவார்கள் அவர்கள்.

ஓவியமா? உருவம் வரைவதெல்லாம் ஹராம் ஆயிற்றே என்பார்கள்!

இசை? அது ஹராம் தான், அதில் என்ன சந்தேகம் என்பார்கள். ஹதீஸ்களை ஆதாரங்களாக சமர்ப்பிப்பார்கள்.

பன்மைச் சமூகத்தில் அரசியலில் ஈடுபடுவது? அதுவும் ஹராம் தான் என்று ஒரேயடியாக மறுத்து விடுவார்கள்.

ஆனால் - மகாஸித் சிந்தனையாளர்கள், குர்ஆன் வசனமாக இருந்தாலும் சரி, நபிமொழியாக இருந்தாலும் சரி, ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்த அனைத்து ஆதாரங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி, இஸ்லாத்தின் உயர்ந்த இலக்குகளைக் கருத்தில் எடுத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வருவார்கள்.

இந்த முடிவு, வாக்கியவாத அணுகுமுறையாளர்களின் கருத்துக்கு மாற்றமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கும்?

குர்ஆன் வசனங்களையும், நபிமொழிகளையும் எடுத்துப் போட்டு, காரசாரமான விவாதம் ஒன்றுக்குத் தயாராகி விடுவார்கள் வாக்கியவாத அணுகுறையாளர்கள்.

மகாஸித் ஆய்வுகள் பற்றியெல்லாம் அவர்கள் சிந்தித்துப் பார்க்கக் கூட முன் வர மாட்டார்கள். மகாஸித் சிந்தனையாளர்களைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி விடுவார்கள்!

நீங்கள் மகாஸித் சிந்தனையாளர்களின் கருத்தை ஏற்பவர்களுள் ஒருவர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

என்ன செய்வீர்கள்?

அறிவு ரீதியாக (rationally and intellectually) நீங்கள் அவர்களிடம் உரையாடத் தொடங்குவீர்கள். எடுத்த எடுப்பிலேயே மறுத்துரைப்பார்கள் அவர்கள். அவர்கள் சார்ந்திருக்கும் சிந்தனைப் பள்ளி அறிஞர்களின் பத்வாக்களை முன் வைப்பார்கள். அது மட்டுமல்ல. மாற்றுச் சிந்தனைகள் அனைத்தையும் - இறை நிராகரிப்பு, இணை வைப்பு, அல்லது வழிகேடு என்று ஒதுக்கி விடுவார்கள்.  

நீங்கள் என்ன முடிவுக்கு வருவீர்கள்?

"இவர்களுடன் விவாதிப்பதே வீண் வேலை. இவர்கள் "திருந்த" மாட்டார்கள். - என்று ஒதுங்கிக் கொண்டு  விடுவீர்கள்!

***

இப்போது கேள்வி என்னவென்றால் - இதற்கு மேல் இத்தகையவர்களை அணுகுவது எப்படி?

கவலைப்பட்ட இளைஞர்களில் சிலர் (கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள்) இந்தக் கேள்வியைத்  தாரிக் ரமளான் அவர்களிடம் கேட்டிருக்கின்றார்கள். அவர் அருமையான விளக்கம் ஒன்றை சொல்லியிருக்கின்றார்.

அது இதோ:

ஒரு உதாரணம்:

கணிதம் அல்லது இயற்பியல் அல்லது இலக்கியம் அல்லது தத்துவம் என்று ஏதாவது ஒரு துறையைத் தேர்வு செய்து படிக்கிறீர்கள் நீங்கள். ஆனால் பாடம் உங்களுக்குப் பிடிக்கவில்லை! அந்தப் பாடத்தை அறிவு ரீதியாக உங்களால் உள் வாங்கிக் கொள்ளவே முடியவில்லை!

ஆனால் அடுத்து என்ன நடக்கிறது?

ஆசிரியர் ஒருவர் புதிதாக வந்து சேர்கிறார்.  உங்களால்  உள்வாங்கிக் கொள்ள முடியாத பாடத்தைத் தான் அவரும் நடத்த வருகிறார். அந்த ஆசிரியரை ஏனோ உங்களுக்கு மிகவும் பிடித்துப் போய் விடுகிறது.  அவர் உங்கள் மீது அக்கரையுடன் நடந்து கொள்கிறார். பிரியமாக நடந்து கொள்கிறார். என்ன நடக்கிறது? அந்தப் பாடம் இப்போது உங்களுக்குப் பிடிக்கத் துவங்கி விடுகிறது!

அதாவது உணர்வுகளற்ற வெறும் அறிவைப் புறக்கணித்து விடும் ஒருவர், உணர்வு கலந்து கொடுக்கப்படும்போது அந்த அறிவை உள் வாங்கிக் கொள்கிறார்! இது தான் சூட்சுமம்!

ஏனைய பாடங்கள் இருக்கட்டும்! மகாஸித் அணுகுமுறையும் ஒரு பாடம் தானே? அந்தப் பாடம் ஏதோ ஒரு காரணத்தினால் வாக்கியவாதிகளுக்குப் பிடிக்கவில்லை! இப்போது - நீங்கள் மகாஸித் பாடம் நடத்த வந்த ஒரு நல்ல ஆசிரியர்! நீங்கள் என்ன செய்வீர்கள்? என்ன செய்திட வேண்டும்?

முதலில் நம்மிடம் விவாதிக்க வருபவர்களை - வாக்கியவாத அணுகுமுறையாளர்களை - நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்! எப்படிப் புரிந்து கொள்வது?

தாரிக் ரமளான் அவர்கள் சொல்கிறார்கள்: வாக்கியவாதிகள் அனைவரும் ஒரே மாதிரி கிடையாது. ஒருவர் வாக்கியவாதியாக மாறுவதற்குப் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம். மூன்று காரணங்களை உதாரணமாகத் தருகிறார் அவர்.  

ஒன்று: மார்க்க அறிஞர்களில் ஒரு சிலர்  தன் சமூகத்துக்கு ஒரு பாதுகாப்பு அரணாக (to protect our community) இந்த அணுகுமுறையைத் தேர்வு செய்கிறார்கள்.

இரண்டு: வேறு சிலர் போதிய அறிவின்மையினால் (ignorance) வாக்கியவாத அணுகுமுறையைப் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்கள்.

மூன்று: இன்னும் சிலர், தங்களது "பிடிவாத" (being stubburn) குணத்தினாலும், இவ்வணுகுமுறையில் நிலைத்து விடுகிறார்கள்.

நீங்கள் யாருடன் உரையாடுகிறீர்களோ, அவர்கள் இது போன்ற எந்தப் பின்னணியின் காரணமாக, வாக்கியவாத அணுகுமுறையின் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனைப் புரிந்து கொண்ட உடனேயே - அவர்கள் மன நிலையில் உங்களை ஒரு நிமிடம் வைத்து சிந்தித்துப் பார்த்தால் அவர் மீது உங்களுக்கு இரக்க உணர்வே மேலோங்கும்! இப்படிப்பட்ட சிந்தனையைத் தான் அவர் intellectual empathy என்று குறிப்பிடுகின்றார்.

அந்த இரக்க உணர்வு அன்பாக மாறும். அக்கரையாக மாறும். இன்னும் சொல்லப் போனால் அவர் மீது ஒரு மதிப்பும் (respect) வந்து விடும்.

இது ஒன்று. அடுத்தது என்னவென்றால் - ஒருவருடைய பின்னணி தெரிந்து கொண்டதற்குப் பின், அவருக்குத் தகுந்தாற்போல் நீங்கள் அவருக்கு விளக்கம் அளித்திட வேண்டும். எல்லா வாக்கியவாத அணுகுமுறையாளர்களையும்  ஒரே மாதிரியாக அணுகிடக் கூடாது என்கிறார் தாரிக் ரமளான்.  நபியவர்களின் வாழ்க்கையிலேயே இதற்கு உதாரணங்கள் உண்டு.

கேள்வி ஒன்று தான் கேட்கப்படும் நபியவர்களிடத்தில். ஆனால் நபியவர்கள் கேட்பவர் - எந்தப் "பின்னணியிலிலிருந்து" கேள்வி கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான பதில்களை அளிப்பார்கள்.

அப்படியானால், நாம் எங்கிருந்து துவங்குவது?

ஒன்று: நாம் "ஒருவரைத் திருத்துவது எப்படி?" என்று சிந்திப்பதை முதலில் விட்டு விட வேண்டும்! மாற்றிக் கொள்ள வேண்டியது நம்மைத்தான் என்பதை உணர்ந்திட வேண்டும்!

இரண்டு: அவருடைய அறிவுப் பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவர் ஒரு குறுகிய ஜன்னல் வழியாக மகா சமுத்திரம் ஒன்றைப் பார்க்கிறார் என்பது  உங்களுக்குப் புரிய வரும்!

மூன்று: அந்த குறுகிய ஜன்னலை விட்டு "வெளியே வந்து" பெரிய உலகம் ஒன்றைப் பார்ப்பது என்பது ஒரு கடினமான பயணத்தைப் போல!

பொதுவாகவே பயணத்தின் மிகக் கடினமான பகுதி எது தெரியுமா? அது தன்னுடைய வீட்டை விட்டு, குடும்பத்தாரை விட்டு, பெட்டி படுக்கையுடன் வெளியேறுகின்ற அந்த நிமிடம் தான்! அது போலத்தான் - வேறொரு வழியே வந்து பரந்த ஒரு உலகத்தைப் பார்ப்பதற்காக ஒரு குறுகிய ஜன்னல் எனும் தன் வீட்டை விட்டு வெளியே வருதல் என்பதும் மிகக் கடினமான துவக்கமே! அவர் அந்தக் கட்டத்தைத் தாண்டி வீட்டை விட்டு வெளியேறுகின்ற வரை நமக்குப் பொறுமை அவசியம்!

தாமாக அவராகவே முன் வந்து "மகா சமுத்திரத்தைப்" பார்க்கின்ற வரை - நமது அன்புக்கும், அக்கரைக்கும், கண்ணியத்துக்கும் உரித்தானவர் அவர் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடவே கூடாது!

இதுவே சுன்னத்தான அணுகுமுறை!

முயற்சி செய்து பார்ப்போம். வெற்றி சுன்னத்தான அணுகுமுறைக்கே!

குறிப்பு: இந்த அணுகுமுறை - வாக்கியவாத அணுகுமுறையாளர்களுக்கு மட்டும் தான் என்று இல்லை!
பெரியாரியவாதிகளாக இருந்தாலும் சரி, பகுத்தறிவாளர்களாக இருந்தாலும் சரி, இடது சாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ஏன், ஒரு படி மேலே போய் சொல்வோம்,
இஸ்லாத்தை வெறுக்கும் ஆர் எஸ் எஸ் காரர்களாக இருந்தாலும் சரி, அனைவரிடத்திலும் இந்த அணுகுமுறையைக் கடைபிடிப்போம்!

மாறாக வெறுப்புக்கு வெறுப்பே பதில் எனில் தூரம் தான் அதிகம் ஆகும்! ஒட்டகத்தைப் பிடித்துத் தருகிறேன் என்று அதனை ஓட ஓட விரட்டி விட்டு ஒட்டகக்காரரிடமிருந்து அதனை தூரமாக்கியவர்களைப் போல் நாம் ஆகி விடக் கூடாது!

Comments