பங்களிப்புகளை நிறுவன மயப்படுத்துங்கள்!

2015 டிசம்பர் சென்னை வெள்ளத்துக்குப் பிறகு, "தொடரட்டும் நமது பங்களிப்பு!" என்று ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். அதில் இவ்வாறு நான் எழுதியிருந்தேன்:

"எனவே - சென்னை வெள்ள சூழ்நிலையில் மனம் உவந்து நிவாரணப்பணிகள் மேற்கொண்ட எம் அன்பு நெஞ்சங்கள் தங்கள் மக்கள் நலப் பணிகளை இடை நிறுத்தி விடாமல் மேலும் தொடர்ந்திட வேண்டும்........... சுருக்கமாகச் சொல்வதென்றால் - நமது பங்களிப்பு என்பது குறுகியது அன்று! அது அகிலம் தழுவியது! அது தற்காலிகமானதும் அன்று! அது உலகம் அழியும் வரைத் தொடரக்கூடியது!"

இந்தப் பதிவின் முக்கிய நோக்கமே, நமது பங்களிப்புகளை நிறுவன மயப்படுத்துவன் அவசியம் குறித்துத் தான்!


இயற்கைப் பேரிடராக இருந்தாலும் சரி, அல்லது மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்னைகளாக இருந்தாலும் சரி, நமது பங்களிப்பு என்பது தற்காலிகமானது அல்ல. குறுகிய வட்டத்துக்குள் நின்று விடுவது அல்ல. அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்து விட்டு ஓய்ந்து விடுவதும் அல்ல. அல்லது முறைப்படுத்தப் படாமல் ஏனோ தானோ என்று செய்து முடிப்பதும் அல்ல.

நமது பங்களிப்பு என்பது பொருளாதார உதவிகளோடு நின்று விடக்கூடியதும் அல்ல. அது நீடித்துச் செய்யப்பட வேண்டும். அது நிலையானதாக அமைந்திட வேண்டும். அவை அனைத்தும் திட்டமிடப்பட்டதொரு கூட்டு முயற்சியாக அமைந்திட வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் - நமது பங்களிப்புகள் அனைத்தும் நிறுவன மயப்படுத்தப் பட வேண்டும்!

நான் இங்கே நமது சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு ஒரே ஒரு உதாரணத்தை வைத்து இதனை விளக்குகிறேன்.

தமிழக மக்களின் விவசாயப் பிரச்னையை எடுத்துக் கொள்வோம். இவ்விஷயத்தில் நாம் என்ன செய்திடலாம், எப்படிப்பட்ட பங்களிப்புகளை வழ்ங்கிடலாம் என்பது குறித்து சில ஆலோசனைகள்:

தமிழக விவசாயிகள் நலச் சங்கம் ஒன்றை - நிறுவுவது. அதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி, பிற சமய/ சமயம் சாரா அங்கத்தினர்களையும் இடம் பெறச்செய்வது.

விவசாயம் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றையும் விலாவாரியாக விளக்கிட இயலாது எனக்கு. ஆனால் விவசாயத்துக்கு நம்மாலான பங்களிப்புகளை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

விவசாயிகளுக்கு அரசுகள் செய்கின்ற வழக்கமான உதவிகளுக்கு அப்பால்...

1 விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்குதல்.

2 விவசாயிகளின் வங்கிக்கடனை அடைத்திட, முஸ்லிம்களின் வங்கி வட்டிகளை எடுத்துக் கொடுத்து விடுதல். (மார்க்கத்தில் அனுமதி உண்டு)

3 பொருளாதார / வாழ்வாதார நெருக்கடிக்கு உள்ளான விவசாயிகளுக்கு, நமது ஸகாத்தினை வழங்குதல்.

4 இப்படிப்பட்ட பொருளாதார உதவிகளுக்கு அப்பால், இயற்கை விவசாயம் செய்திட நம்மால் ஆன உதவிகளைச் செய்தல். (இதற்கு நமது நண்பர் அலீஸ் பைக் ஒரு நல்ல உதாரணம்).

5 விவசாயப் பொருள்களை நல்ல விலைக்கு விற்றிட அவர்களுக்கு உதவுதல்.

இதற்கு மேல் எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. மன்னிக்கவும்.

நான் சொல்ல வந்தது - நமது பங்களிப்புகள் - நிறுவன மயப்படுத்தப் பட வேண்டும் என்பதைத் தான். விவசாயம் என்பது ஒரு உதாரணம் தான்.

நமது பங்களிப்புகள் மிகவும் விரிவானவை.

Comments